புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டு பிரஜையான சோப்ராஜின் முழுப்பெயர் ஹட்சண்ட் பனாவுனி குர்முக் சார்லஸ் சோப்ராஜ் (78) என்பதாகும். வியட்நாமை சேர்ந்த சோப்ராஜின் தாய், சிந்தி சமூகத்து இந்தியர் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இருவருக்கும் மணமாகாத நிலையில் வியட்நாமின் சைகானில் ஏப்ரல் 6, 1944-ல் சோப்ராஜ் பிறந்தார்.
சோப்ராஜை தனது மகனாக இந்தியத் தந்தை ஏற்க மறுத்ததால் எந்த நாட்டிலும் சோப்ராஜுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. அப்போது, வியட்நாமை ஜப்பான் ஆக்கிரமித்திருந்தது. இச்சூழலில், வியாட்நாமில் இருந்த பிரான்ஸ் நாட்டு படை வீரரை காதலித்து மணந்தார் சோப்ராஜின் தாய். பிறகு இவர் தனது கணவர் மற்றும் மகன் சோப்ராஜுடன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு இடம் பெயர்ந்தார். இதன் பலனாக பிரான்ஸ் ராணுவம் சோப்ராஜையும் ஏற்றுக்கொண்டு குடியுரிமை வழங்கியது.
கடந்த 1975 முதல் இந்தியாவில் தான் கொலை குற்றங்களை தொடங்கினார் சோப்ராஜ். முதலில் கொல்லப்பட்ட இளம்பெண் நீச்சல் உடையில் இருந்தார். அஜய் சவுத்ரி எனும் இந்தியரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தார். இரண்டாவதாக விதாஜிஹக்கீம் எனும் இளம் பெண்ணை நீச்சல்குளத்தில் கொலை செய்தார் சோப்ராஜ். அப்பெண்ணுடன் அவரது ஆண் நண்பரும் கொல்லப்பட்டார். 1976-ல் இந்தியாவுக்கு வந்தபிரான்ஸ் நாட்டு இளம் பெண்ணை கொலை செய்தார் சோப்ராஜ். நேபாளத்திலும் இரண்டு வெளிநாட்டு இளம்பெண்கள் கொலை என இது சங்கிலித் தொடரானது.
‘டான்’ இந்திப் படத்தில் அமிதாப்பச்சன் பேசும் ஒரு வசனம் மிகவும் பிரபலமானது. இதில் அமிதாப், “இந்த டானை 11 நாட்டு போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்” என்று கூறுவார். இந்த வசனம் உண்மையில் சார்லஸ் சோப்ராஜுக்கு மட்டுமே பொருந்தும். அந்த அளவுக்கு இந்தியா, நேபாளம், பிரான்ஸ், தாய்லாந்து, மியான்மர், ஈரான், துருக்கி, அமெரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட 11 நாடுகளில் பல கொலைக் குற்றங்களை புரிந்து தப்பி ஓடினார் சார்லஸ். கடந்த 1972 முதல் 1976 வரை 24 பெண்களை கொன்றதாக சோப்ராஜ் மீது பல நாடுகளில் வழக்குகள் பதிவாகின.
» கட்டுப்பாடு தேவையில்லை முன்னெச்சரிக்கை அவசியம் - வைரலாஜிஸ்ட் ககன்தீப் கங் தகவல்
» சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 16 வீரர்கள் பரிதாப உயிரிழப்பு
கவர்ச்சி உடை அணிந்த வெளிநாட்டுப் பெண்களே பெரும்பாலும் இவரால் கொல்லப்பட்டதால் ‘பிகினி கில்லர்’ என்று ஆங்கிலப் பத்திரிகைகள் அழைத்தன.
இவருடைய கொலைகளை கருவாக வைத்து தி செர்பண்ட், மெய்ன் அவுர் சார்லஸ், பிகினி கில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி கோடிகளை குவித்தன.
பிரான்ஸ் வாழ்க்கையில் சிறிய திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்ட சார்லஸுக்கு 20 வயதில் சந்தால் கேம்பகனான் என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. பல நாட்டு பெண்களை கவர பல மொழிகளை சோப்ராஜ் கற்றுத் தேர்ந்துள்ளார். பிரான்ஸில் மேரி லெக்ரிக் எனும் இளம்பெண் சோப்ராஜின் ஆசைநாயகியாகி அவருடன் இணைந்து பல திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டார். டெல்லி திகார் சிறையில் சோப்ராஜ் இருந்த போது 2008-ல் பிக்பாஸ் தொடர் 5-ல் கலந்து கொண்ட நிகிதா பிஸ்வாஸ் எனும் 20 வயது பெண்ணை 64 வயதில் மணந்து கொண்டார்.
சோப்ராஜ் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இங்குள்ள மார்செய்லி சிறையில் சக கைதிகள் மூலம் பெரும் கொடுமைகளை அனுபவித்துள்ளார். அவரது வாழ்க்கையில் பிரான்ஸ் சிறை வாழ்க்கையே மிகவும் சிரமத்திற்கு உரியதாக இருந்தது. இதன் பிறகு சிறையில் மகிழ்ச்சியாகவே பொழுதை கழித்துள்ளார் சோப்ராஜ்.அதேநேரத்தில் சிறைகளில் இருந்து தப்பிச் செல்லும் வித்தையையும் தெரிந்து வைத்திருந்தார். 1971-ல் கிரீஸ் சிறையிலிருந்து தப்பி மும்பை வந்தவர் வழிப்பறி குற்றத்தில் சிக்கினார். அப்போது தனக்கு அடிவயிற்றில் கடும்வலி என சோப்ராஜ் நடித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மிக எளிதாக தப்பினார் சோப்ராஜ்.
இதுபோல் சோப்ராஜ் தப்பிச் சென்ற சிறைகளில் முக்கிய இடம்பெற்றது டெல்லி திகார் சிறை. இங்கு 10 ஆண்டுகள் கழித்த பிறகு தப்பிச் செல்லும் திட்டத்தை அவர் நிறைவேற்றினார். கடந்த 1986, மார்ச் 16-ம் தேதி தனக்கு பிறந்த நாள் என்று கூறி போதை கலந்த இனிப்பு வழங்கினார். அவற்றை சாப்பிட்ட கைதி முதல் பாதுகாவலர் வரை மயக்கம் அடைந்ததால் திகார் சிறையில் இருந்து சாவகாசமாகத் தப்பினார் சோப்ராஜ்.
சோப்ராஜ் தப்பியது, இந்தியாவின் தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை அப்போது எதிரொலித்தது. பின்னர் அவரை கோவாவில் கைது செய்தனர்.
திகார் சிறையிலிருந்து சோப்ராஜ் தப்பிச் சென்றதற்கு வேறொரு காரணமும் இருந்தது. தாய்லாந்தில் அவருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் 1977-ல் கைது உத்தரவு பிறப்பித்தது. இதில் தனக்கு நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் என சோப்ராஜ் நம்பினார். இதில் சிக்காமலிருக்கவே அவர் திகார் சிறையிலிருந்து தப்பி மீண்டும் போலீஸாரிடம் பிடிபட்டதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து 11 வருடம் சிறை தண்டனை அனுபவித்த சோப்ராஜ், 1997-ல் விடுதலையானார். அதற்குள் அவருக்கு எதிரான தாய்லாந்து கைது உத்தரவு காலாவதியானது.
திகாரில் இருந்து நேராக தனது பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பினார் சார்லஸ். அவரது அச்சமில்லாத குற்றங்களால், சர்வதேச குற்றவாளிகள் இடையே சார்லஸ் சோப்ராஜ் என்ற பெயர் மரியாதைக்குரியதாக மாறியது. இச்சூழலில் அவரது கதையை ஹாலிவுட் திரைப்படமாக்க நினைத்த பிரபல பிரான்ஸ் பட நிறுவனத்திடம் ரூ.97 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க ஐந்தாயிரம் டாலர் பேரம் பேசியுள்ளார் சோப்ராஜ்.
இந்த ராஜவாழ்க்கைக்கு இடையே 2003-ல் திடீரென சோப்ராஜ் ஏனோ நேபாளம் வந்தார். காத்மாண்டு நட்சத்திர ஓட்டல் முன் நின்ற அவரது படத்துடன் செய்தி வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நோபாள போலீஸார் சோப்ராஜை கைது செய்தனர். ஏனெனில், 1975-ல் நேபாளத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் இளம்பெண்களை கொலை செய்ததற்காக தேடப்பட்டு வந்தார். இத்துடன் போலி பாஸ்போர்ட்டில் நேபாளம் வந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவாகியது. இந்த வழக்குகளின் விசாரணையில் நேபாள உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12, 2004-ல் சார்லஸுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
அப்போது முதல் நேபாளத்தில் சிறையில் இருந்த சோப்ராஜ், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகி நேற்று விடுதலையானார். குடியேற்றத் துறை நடைமுறைகள் முடிந்து நேற்றே அவர் பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பிக்பாஸ் தொடர் 5-ல் பங்கேற்ற நிகிதா பிஸ்வாஸ் எனும் 20 வயது பெண்ணை 64 வயதில் மணந்து கொண்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago