கோவை, நீலகிரிக்கு பாஜக ‘குறி’... டிச.27-ல் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகை

By பால. மோகன்தாஸ்

புதுடெல்லி: கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பாஜக குறிவைத்துள்ளதாகவும், இவ்விரு தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா இம்மாதம் 27-ம் தேதி வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக சற்றே பலவீனமாக உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளாக 144 தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அங்கு வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 2.O நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் என அக்கட்சி இதனைக் குறிப்பிடுகிறது.

இதில், தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில், கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 27ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அன்று இவ்விரு தொகுதிகளின் பல்வேறு இடங்களுக்கும் அவர் நேரில் செல்ல இருக்கிறார். அப்போது, கட்சியின் மண்டல் மற்றும் பூத் தலைவர்களை அவர் சந்திப்பார் என்றும், பூத் அளவில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்குவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இவ்விரு தொகுதிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கு ஜெ.பி. நட்டா நேரடியாகச் செல்ல திட்டமிட்டுள்ளார். மீதமுள்ள தொகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் செல்வார்கள் என கூறப்படுகிறது.

கோவை மற்றும் நீலகிரி தொகுதி சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு மறுநாள் ஒடிஷா செல்கிறார் நட்டா. அந்த மாநிலத்தில் கந்தமால் மற்றும் பூரி ஆகிய இரு தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். பாஜக பலவீனமாக உள்ள தொகுதிகளில் கவனம் செலுத்துவதற்கென உள்ள குழுவில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக வினோத் தாவே நியமிக்கப்பட்டுள்ளார். இணை ஒழுங்கிணைப்பாளராக சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE