இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், சர்வதேச அளவில் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,408 ஆக இருந்தது. இது, டிசம்பர் 16 முதல் 22 வரையிலான ஒரு வாரத்தில் 153 ஆக குறைந்துள்ளது. அக்டோபர் 2-ம் வாரத்தில் 1.05 சதவீதமாக இருந்த கரோனா தொற்று, டிசம்பர் 3-வது வாரத்தில் 0.14 சதவீதமாகக் குறைந்துள்ளது.

டிசம்பர் 22-ம் தேதி நிலவரப்படி, கரோனா பாதிப்பில் 78 சதவீதம் 5 மாநிலங்களில்தான் பதிவாகி உள்ளது. 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்று முற்றிலுமாக இல்லை.

ஜப்பானில் தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 521 ஆக பதிவாகி உள்ளது. இது உலக அளவிலான பாதிப்பில் 26.80 சதவீதம். உலக அளவிலான தொற்று பாதிப்பில் இந்தியாவின் பங்கு 0.03 சதவீதம் மட்டுமே.

எனினும், சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஆக்ஸிஜன் உற்பத்தி, வென்டிலேட்டர்கள் இருப்பு, வாகன வசதி, பணியாளர் எண்ணிக்கை ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்துமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன" என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE