கரோனா முன்னெச்சரிக்கை | மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

முன்னதாக நேற்று, நாட்டின் கரோனா நிலவரம், சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார தயார்நிலை, தடுப்பூசி திட்டம், புதிய கரோனா வைரஸ்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவுவது குறித்து சுகாதாரத் துறை செயலாளர், நிதி ஆயோக் மூத்த அதிகாரிகள் சார்பில் காணொலி வாயிலாக கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. சர்வதேச அளவில் தினசரி கரோனா தொற்று 5.9 லட்சமாக இருப்பதாகவும் இந்தியாவில் தினசரி தொற்று 153 ஆக இருப்பதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
கூட்டத்திற்குப் பின்னர் பேசிய பிரதமர் மோடி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை அடுத்தடுத்து கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று ஆன்லைனில் ஆலோசனை நடத்துகிறார். இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்கள் கரோனா தொற்றை எதிர்கொள்ள எந்த அளவுக்கு தயார்நிலையில் இருக்கின்றன. தடுப்பூசி நிலவரம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே தமிழகம், புதுடெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கரோனா மேலாண்மைக்கான வழிகாட்டுதல்படி, குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், உள் அரங்குகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி, மருத்துவர்கள் ஆலோசனை பெற்று, கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையை துறை அலுவலர்கள் எடுக்க வேண்டும்.

சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE