மணிப்பூரில் பேருந்து கவிழ்ந்து 8 மாணவிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

மணிப்பூரின் தவுபால் மாவட்டம், யயிரிபோக் என்ற இடத்தில் தம்பால்னு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் நோனி மாவட்டம் கூப்பும் என்ற இடத்துக்கு கல்விச் சுற்றுலா புறப்பட்டனர்.

இந்நிலையில் கூப்பும் அருகே நுங்சாய் என்ற கிராமத்தில் இவர் களின் பேருந்து ஒரு வளைவில் வேகமாக திரும்பும்போது கட்டுப் பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.

தலைநகர் இம்பாலில் இருந்து தென்மேற்கே 50 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 5 மாணவிகள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் இம்பால் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையில் உள்ள மாணவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்துக்கு மாநில சுகாதார அமைச்சர் சபம் ரஞ்சன் சிங் விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தார். மாணவர்கள் உயிரிழப்புக்கு மாநில முதல்வர் பிரேன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE