போதைப் பொருள் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கிறது - மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘போதைப் பொருள் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குகிறது’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

நாட்டில் போதைப் பொருள் பிரச்சினை குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அளித்த பதிலில் கூறியதாவது: நாட்டில் போதைப் பொருள் விற்பனையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்ற கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு பின்பற்றுகிறது.

நம் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துகின்றன. இந்த சட்டவிரோத பணம் நமது பொருளாதாரத்தை படிப்படியாக பாதிக்கும். போதைப் பொருள் அச்சுறுத்தலை தடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் முன்வர வேண்டும். எல்லைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மூலமாக போதைப் பொருட்கள் நுழைவதை நாம் தடுக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களை நாம் தப்பவிடக் கூடாது. போதைப் பொருட்கள் கடத்தல் பிரச்சினை இன்னும் 2 ஆண்டுகளில் தீர்க்கப்படும். நாட்டில் உள்ள போதைப் பொருட்கள் நெட்வொர்க்கை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. எவ்வளவு பெரிய கும்பலாக இருந்தாலும், அடுத்த 2 ஆண்டுகளில் அவர்கள் சிறையில் இருப்பர்.

நாட்டின் எல்லைகளுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு. அதனால் போதைப் பொருட்களை கைப்பற்றும் உரிமை எல்லை பாதுகாப்புபடையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழக்கு பதிவு செய்யும் உரிமை இல்லை. சில மாநிலங்களில் இந்த விஷயத்தில் அரசியல் செய்யப்பட்டு, போதைப் பொருள் கடத்தல் ஊக்குவிக்கப்படுகிறது. உரிமைகள் இல்லாமல் மத்திய அமைப்புகளால் செயல்பட முடியாது. நமது பாதுகாப்பு அமைப்புகள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் வளைகுடா நாடுகளில் இருந்து கடத்திவரப்படுகின்றன. இதில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். போதைப் பொருள் தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படுகின்றன. 12 மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE