நீதிபதி மஞ்சுநாத் நியமனம்: உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிந்துரை

நீதிபதி மஞ்சுநாத் நியமனத்தை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை அனுப்பி உள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.எல்.மஞ்சுநாத்தை நியமிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு (கொலீஜியம்) பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நிராகரித்து திருப்பி அனுப்பியது. அவர் மீது சில புகார்கள் வந்திருப்பதாக குறிப்பிட்டு, மத்திய அரசு கோப்பை திருப்பி அனுப்பியுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை நீதிபதியாக நியமிக்க அளித்த பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதால் அந்த நியமனம் கைவிடப்பட்டது.

அதேநிலை மீண்டும் ஏற்படாத வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனக்குழு, மஞ்சுநாத் நியமனத்தை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. சட்டத் துறை அமைச்சகம் தரப்பில் குறிப் பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறை அதே பரிந்துரையை வலியுறுத்தினால், அவரை நியமிப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மஞ்சுநாத் பதவியேற்பார்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வரும் 22-ம் தேதி வரை அங்கு பணியில் இருப்பார். வரும் 26-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக மஞ்சுநாத்தை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE