புதுடெல்லி: கரோனாவை காரணம் காட்டி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், கரோனாவை காரணம் காட்டி இந்திய ஒற்றுமை யாத்திரையை மத்திய அரசு வெளிப்படையாக எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டியள்ளார். அவர் கூறி இருப்பதாவது: "ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி ஒருவர், இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே, ராகுல் காந்திக்கு மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதி இருந்தார்.
மத்திய அரசோ, மாநில அரசுகளோ கரோனா கட்டுப்பாடுகள் குறித்து எதுவும் கூறாத நிலையில், ‘இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் பொது சுகாதாரம் கருதி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என மன்சுக் மாண்டவியா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானிலும், கர்நாடகாவிலும் பாஜக பிரச்சார யாத்திரை மேற்கொண்டு வருகிறது. அதை நிறுத்தச் சொல்லாத மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், இந்திய ஒற்றுமை யாத்திரையை மட்டும் நிறுத்தச் சொல்வது ஏன்?
எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது. விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. கடந்த 2020 மார்ச் மாதத்தில் கரோனா உச்சத்தில் இருந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசை கவிழ்ப்பதற்காகவே முழு அடைப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு தள்ளிப்போட்டது. பாஜகவுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் மக்களின் ஆரோக்கியம் அதற்கு முக்கியமாக இருப்பது இல்லை. ஆனால், காங்கிரஸ் அப்படி அல்ல. கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அதைப் பின்பற்றி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கேள்விகளை அடுக்கும் காங்கிரஸ்: இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, "ராகுல் காந்திக்கு மட்டும் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏன்? ராஜஸ்தானில் பாஜக தலைவர் சதிஷ் புனியா மேற்கொண்டு வரும் மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்பப்பட்டதா? நாட்டில் எங்குமே கரோனா விதிகள் அமலில் இல்லை. முதலில் விதிகளை அறிவியுங்கள். பிறகு நாங்கள் அவற்றை பின்பற்றுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
"தற்போது நாட்டின் எந்தப் பகுதியிலும் கரோனா கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இந்திய ஒற்றுமை யாத்திரையை மட்டும் மத்திய அரசு குறிவைப்பது ஏன்?" என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகில் கரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே, சீனாவுக்கான விமான சேவையை அரசு நிறுத்த வேண்டும். உலகின் பல நாடுகளில் கரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வருவது கவலைக்கு உரியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago