‘ராமர் கோயிலின் உணர்வை பிரதிபளிக்கும் வகையில் அயோத்தி விமான நிலையம் அமையும்’

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம், ராமர் ஆலயத்தின் உணர்வை பிரதிபளிக்கும் வகையில் இருக்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருவதை அடுத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.242 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரு நேரத்தில் 300 பயணிகளை கையாள முடியும் என இந்திய விமான நிலைய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆண்டுக்கு 6 லட்சம் பயணிகளை இந்த விமான நிலையத்தால் கையாள முடியும் என்றும் அது கூறியுள்ளது.

இந்த விமான நிலையத்தின் மேற்கூரை, ராமாயண பாத்திரங்களின் படங்களைக் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் அமைக்கப்பட உள்ள கண்ணாடி முனையம் அயோத்தி அரண்மனையைப் போல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியக் கட்டிடக் கலை மற்றும் நவீன கட்டிடக் கலை ஆகியவற்றின் கலவையாக இந்த விமான நிலையம் இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய விமான நிலைய ஆணையம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அயோத்தியை இந்தியாவின் ஆன்மிக மையமாகவும், சர்வதேச சுற்றுலாத் தளமாகவும் மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தி இருக்கிறார் என தெரிவித்துள்ள இந்திய விமான நிலைய ஆணையம், பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறும் வகையில் இந்த விமான நிலையம் இருக்கும் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE