போலி ஃபேஸ்புக் கணக்குகள் விவகாரம்: மத்திய அரசின் பதிலுக்கு ரவிக்குமார் எம்.பி அதிருப்தி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: “போலி ஃபேஸ்புக் கணக்குகள் மீதான செய்திகள், அரசின் கவனத்திற்கு வரவில்லை” என மக்களவையில் மத்திய அரசு கைவிரித்தது. இது தொடர்பான விளக்கத்தை, மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் இன்று விழுப்புரம் எம்.பி ரவிகுமாரின் கேள்விக்கானப் பதிலாக வெளியிட்டார்.

இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் எம்.பி.யான டி.ரவிகுமார் எழுப்பியக் கேள்வியில், ''ஃபேஸ்புக் பற்றி சமீபத்தில் வெளியான சில செய்திகளை அரசு அறிந்திருக்கிறதா? இந்தச் செய்திகள் வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட முன்மொழியப்பட்ட நடவடிக்கை என்ன? ஃபேஸ்புக் பற்றி வெளியான செய்திகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து எந்த சட்ட ஆலோசனையும் கோரப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? ஃபேஸ்புக் வெளிப்படுத்திய செய்தியின் அடிப்படையில் 2000-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைத் திருத்துவதற்கு ஏதேனும் முன்மொழிவுகள் உள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதிலில், ''சட்ட ஆலோசனை பெற வேண்டிய அளவுக்கு ஃபேஸ்புக் பற்றிய எந்த ஒரு செய்தியும் சமீபத்தில் அரசாங்கத்தின் கவனத்திற்கு வரவில்லை. எனவே, இதர கேள்விகளுக்குப் பதில் சொல்லும் தேவை எழவில்லை.

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன் ஃபேஸ்புக் முன்னாள் பணியாளரான பிரான்சிஸ் ஹவ்ஜென் என்பவர் சாட்சியம் அளித்தார். 'தி ஃபேஸ்புக் பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் அவர் மூலம் ஃபேஸ்புக்கின் பல முக்கிய உள்ஆவணங்கள் கசிந்தன. இதன்மூலமாகவும், தொடர்ச்சியாக வெளியான அறிக்கைகளாலும், ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தெளிவாக அறிந்திருந்தது என்பது வெளிச்சமானது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 2.5 மணி நேர விசாரணையின்போது ஹவ்ஜன் கூறும்போது, ''ஃபேஸ்புக் தன் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை விடவும் தன் வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கிறது. குறிப்பாக உலகின் வளரும் நாடுகளில் பயனர்களிடையே பிரிவினையை வளர்க்காமல் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான மொழி மற்றும் கலாச்சார நிபுணத்துவம் கொண்டவர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இல்லை'' என்றார்.

இது தொடர்பாக விவரங்கள் கேட்டு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியது. ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிய அந்நிறுவனத்தின் மற்றொரு பணியாளர் ஸோபி ஷாங் என்பவரும் முக்கிய ஆவணங்களை வெளியிட்டார்.”

ரவிக்குமார் எம்.பி.பேட்டி: இதன் மீது 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் விழுப்புரம் மக்களவை தொகுதியின் எம்பியான டி.ரவிகுமார் கூறும்போது, ''இந்தியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஐந்து போலி நெட்வொர்க்குகளை ஷாங் கண்டுபிடித்ததாக ஆவணங்கள் வெளிப்படுத்தின. இவை பாஜக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா இரண்டு மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒன்று என்றிருந்தன.

அவற்றில் நான்கு நெட்வொர்க்குகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அகற்றப்பட்டபோது, பாஜகவின் எம்,பி வினோத் குமார் சோங்கருடன் தொடர்புடைய நெட்வொர்க் அகற்றப்படவில்லை. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு எடுத்த முயற்சிகளுக்கும் பாஜக அரசு ஒத்துழைப்பு தரவில்லை.

இந்தப் பின்னணியிலேயே நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்பதுபோல அமைச்சர் பதிலளித்திருக்கிறார். இதன்மூலம் உண்மையை மறைக்க அமைச்சர் மழுப்பலான பதிலை அளித்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்