சுரங்கப் பாதை, நெடுஞ்சாலை, ரயில் பாதை, ரஃபேல் விமானம் - சீன எல்லையில் ஊடுருவலை தடுக்க 4 முக்கிய கட்டமைப்பு வசதிகள்

By செய்திப்பிரிவு

குவாஹாட்டி: சீன எல்லையில் ஊடுருவலைதடுக்க, 4 முக்கிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் எல்லையில் சீன ராணுவத்தினர் கடந்த 9-ம் தேதி ஊடுருவ முயன்றனர். இதை இந்திய வீரர்கள் தடுத்தனர். அப்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அதன்பின் சீன ராணுவத்தினர் பின்வாங்கினர். இதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு, டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்க முயன்றதையும் இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அனைத்து காலநிலைகளிலும் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த மாதத்துக்குள் முடிந்து விடும். மேலும் பாலிபாரா-சர்தார்-தவாங் வழித்தடத்தின் ஒரு பகுதியாக சேலா கணவாய் என்ற இடத்தில் சுரங்கப்பாதையை, எல்லைகள் ரோடு அமைப்பினர் அமைத்து வருகின்றனர்.

இது 13,000 அடி உயரத்துக்கு மேலே அமைக்கப்படும் உலகின்மிக நீண்ட இருவழி சுரங்கப்பாதையாக இருக்கும். இது 1.55 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதன் அணுகுசாலை 9 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.

தவாங்கிலிருந்து கானுபாரி வரை சுமார் 2,000 கி.மீ தூரத்துக்கு அருணாச்சல் நெடுஞ்சாலையை மாநில அரசு அமைத்து வருகிறது.கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 2024-ல் முடிவடையும்.

மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் இடையே சிவோக் என்ற இடத்திலிருந்து ரங்ப்பூ வரை 45 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதையும் அமைக்கப்படுகிறது. இது அடுத்தாண்டுக்குள் நிறைவடையும். இவற்றின் மூலம் சீன எல்லையை ஒட்டியுள்ள நாதுலா கணவாய் மற்றும் டோக்லாம் பகுதிகளுக்கு படைகளை விரைவாக அனுப்ப முடியும்.

ரஃபேல் போர் விமானங்கள்: இதுதவிர மேற்கு வங்க மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில், பூட்டான் எல்லை அருகேஅமைந்திருக்கும் ஹசிமா விமானப்படை தளத்தில் புதிதாக வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சீன எல்லையில், ஊடுருவல் ஏதும் நடைபெற்றால் அதற்கு உடனடியாக பதிலடிகொடுக்கும் வகையில் சீன எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE