காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 லஷ்கர் தீவிரவாதிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் தெற்கில் உள்ள ஷோபியான் மாவட்டம், ஜைனபோரா பகுதியில் உள்ள முன்ஜ் மார்க் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அதிகாலையில் அந்த கிராமத்தை ராணுவம், மாநில காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த வீரர்கள் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜய் குமார் தனது ட்விட்டர் பதிவில், “கொல்லப்பட்ட மூவரும் உள்ளூர் தீவிரவாதிகள். மூவரில் இருவர், ஷோபியானை சேர்ந்த லத்தீப் லோனே மற்றும் அனந்தநாக்கை சேர்ந்த உமர் நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிருஷ்ண பட் என்ற காஷ்மீர் பண்டிட் கொலையில் லத்தீப் லோனேவுக்கு தொடர்புள்ளது. நேபாளத்தை சேர்ந்த டில் பகதூர் தாபா என்ற தொழிலாளி கொலையில் உமர் நசீருக்கு தொடர்புள்ளது. சம்பவ இடத்திலிருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கியும் 2 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE