நாடாளுமன்றத்தில் கரோனா பெயரில் தொடரும் தடை - உதவியாளர்கள் அனுமதிக்கப்படாததால் குமுறும் எம்.பி.க்கள்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கரோனா பரவல் ஏறக்குறைய முடிவுக்கு வந்தபோதிலும் கரோனா கட்டுப்பாடுகள் நாடாளுமன்றத்தில் தொடர்கின்றன. இதில், பொதுமக்களுக்கு கிடைத்த அனுமதி தங்கள் உதவியாளர்களுக்கு கிடைக்கவில்லை என இரு அவைகளின் எம்.பி.க்களும் குமுறி வருகின்றனர்.

கரோனா பரவலின்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. பிறகு படிப்படியாக குறைந்த கட்டுப்பாடுகள், தற்போது பார்வையாளர்களாக பொதுமக்களை அனுமதிப்பது வரை தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களின் நேர்முக உதவியாளர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியக் கட்டிடத்தில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்தின் கிளைக் கட்டிடம்வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால், தங்களின் பல்வேறு முக்கியப் பணிகள் தடைபடுவதாக எம்.பி.க்கள் புகார் கூறி வருகின்றனர். இப்பிரச்சினையால் உதவியாளர்களுக்கு நாடாளுமன்றம் சார்பில் அளிக்கும் ஊதியம் வீணாவதாகவும், தொகுதி மக்களுக்கான பணிகளையும் தங்களால் செய்ய முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. உதவியாளர்களுக்கு நீடிக்கும் தடை குறித்து கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் புகார் அளித்தபோதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை என எம்.பி.க்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்.பி. முகம்மது அப்துல்லா கடந்த ஜூலை 20-ல் அப்போதைய மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில், “எம்.பி.க்களின் உதவியாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு நீடிக்கும் தடை காரணமாக எங்கள் பணி தடைபடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கைப்பேசி அலைவரிசை முடக்கப்படுவதால் அவர்களுடன் போனில் பேசி பணியை சமாளிப்பதும் சிக்கலாக உள்ளது. மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு மட்டும் எந்தத் தடையும் இல்லை. ஒவ்வொரு அமைச்சருக்கும் 3-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் எந்த தடையும் இன்றி வந்து செல்கின்றனர். இந்திய அரசியலைமைப்பு சட்டப்படி அனைவரும் சமம் என்றிருக்கும் போது, அமைச்சர்களைப் போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவது சரியல்ல. எனவே, இந்தப் பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தி தடையை விலக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி. அப்துல்லாவின் கடிதத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆளும் கட்சி என்பதால் தலைமைக்கு அஞ்சி பாஜக எம்.பி.க்கள் கையொப்பம் இடாவிட்டாலும், மறைமுகமாக ஆதரவளித்துள்ளனர்.

இக்கடிதத்தின் நகல் மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா மற்றும் 2 அவைகளின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் ஒவ்வொரு பத்திரிகை குழுமத்துக்கும் ஓரிருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இத்தடை நீக்கப்படாததால் இதர பத்திரிகையாளர் களால் நாடாளுமன்ற இரு அவைகளின் முழு நடவடிக்கைகளையும் செய்தியாக்க முடிவதில்லை.

புதிய பத்திரிகையாளர்கள் அனுமதி, நிரந்தர அடையாளஅட்டை வழங்குதல் மற்றும் அவர்களது செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு என 24 மூத்த பத்திரிகையாளர்களுடன் ஒரு‘பத்திரிகையாளர் ஆலோசனைக் குழு’ உள்ளது.

இக்குழு, ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அமைக்கப்படும். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பேற்றது முதல் இந்தக்குழு அமைக்கப்படாமல், பத்திரிகை சுதந்திரமும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE