பாஜகவினரை கொந்தளிக்க வைத்த கார்கேயின் கருத்துகள்: நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோர வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக குறித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் கடுமையான பேச்சுக்கு, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜகவினர் வலியுறுத்தினர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில், அம்மாநிலத்தின் ஆல்வர் நகரில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பழமையான கட்சியான காங்கிரஸ் நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது. காங்கிரஸ் தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்களும் நாட்டிற்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் (பாஜகவினர்) வீட்டு நாயாவது நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்திருக்குமா? தற்போது வரை அவர்கள் (பாஜக) தங்களை போராளிகள் என்று கூறிக் கொள்கிறார்கள். நாம் ஏதாவது சொன்னால் நம்மை தேசத் துரோகி என்பார்கள்” என்றார்.

மேலும், இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்காததை விமர்சித்து பேசிய கார்கே, "அவர்கள் (பாஜக அரசு) வெளியில் சிங்கம் போல பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் எலியைப் போல செயல்படுகிறார்கள்” என்றார்.

கார்கேயின் இந்த கருத்துகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் தொடங்கிய உடன் பாஜக வலியுறுத்தியது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய வணிகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், "மல்லிகார்ஜுன கார்கேயின் கருத்துகளையும், புண்படுத்தும் விதமான மொழியை அவர் கூறியதையும், பொய்யைப் பரப்ப நினைத்ததையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ராஜஸ்தானில் அவர் பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்.

இந்தக் கோரிக்கையால் அவையில் கூச்சல் எழுந்தது. உறுப்பினர்களைக் கட்டுப்படுத்திய துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர், “அந்தக் கருத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசப்பட்டிருக்கிறது. நாட்டின் 135 கோடி மக்களும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் அவைக்கு வெளியே ஏதோ ஒன்றை பேசியிருக்கிறார். நீங்கள் எல்லாம் குழந்தைகள் இல்லை” என்றார்.

பாஜகவின் மன்னிப்பு கேட்கும் கோரிக்கையை நிராகரித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நான் அதை மீண்டும் இங்கே சொன்னால் அது அவர்களுக்கு (பாஜக) கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், சுதந்திரப் போராட்டத்தின்போது மன்னிப்பு கேட்டவர்கள், சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள். காங்கிரஸ் இந்தியாவை பிரிக்கும் யாத்திரையை நடத்துகிறது என்று அவர்கள் பேசினார்கள். காங்கிரஸ் எப்போதும் இந்தியாவை ஒன்றுபடுத்தும் வேலையைத்தான் செய்யும். அதற்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களது உயிரைத் தந்திருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நாட்டிற்காக யார் தியாகம் செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று பேசினார்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பியூஸ் கோயல், "அவர்களுடைய வரலாறு அவர்களுக்கு (காங்கிரஸ்) நினைவில் இல்லை என்று நினைக்கிறேன். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை, பாகிஸ்தான் அச்சுறுத்தல், சீனா ஆக்கிரமிப்பு, பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல் அவமானப்படுத்தப்பட்டது எல்லாம் அவர்களால்தான் என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்" என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்