அரசு செலவில் அரசியல் விளம்பரம்: ஆம் ஆத்மியிடம் ரூ.97 கோடி வசூலிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசியல் விளம்பரங்களை அரசு செலவில் வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க வேண்டும் என டெல்லி தலைமைச் செயலாளருக்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அக்கட்சி சமீபத்தில் டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலின்போது அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் அரசியல் விளம்பரங்களாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை வசூலிக்க டெல்லி தலைமைச் செயலாளருக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உருவாக்கப்பட்ட குழு பரிந்துரைத்த அரசு விளம்பரங்களுக்கான உள்ளடக்க விதிகளை, ஆம் ஆத்மி கட்சி மீறியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள துணை நிலை ஆளுநர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி துணை நிலை ஆளுநருக்கும், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடந்த ஜூன் மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார். புதிய மதுக்கொள்கையை திரும்பப் பெற்றதை அடுத்து, அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, இதற்கு முன் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக ஆளுநர் சக்சேனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, சக்சேனாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டிருந்த சில ட்விட்டர் பதிவுகளை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE