சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் மோடி யோசனை - அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி இரண்டு திட்டங்களை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பாஜக உயர்மட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்திய அரசு எழுதிய கடிதத்தை அடுத்து 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்களுக்கான ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்த சூழலில், சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு திட்டங்களை முன்வைத்துள்ளார். ஒன்று, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வது. இரண்டாவது, ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்களில் பங்கேற்கும் சர்வதேச தலைவர்களுக்கு சிறுதானிய உணவு வகைகளை வழங்குவது. இதன் மூலம் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை புரிய வைக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்." என கூறினார்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் இன்று மதியம் சிறுதானிய விருந்து அளிக்கப்பட இருக்கிறது. மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் முன் முயற்சி காரணமாக நாடாளுமன்றத்தில் சிறுதானிய விருந்து அளிக்க இருப்பதாக நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் அனைவருக்கும் இந்த விருந்து அளிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த விருந்தில் சிறுதானியங்கள் மட்டுமே இருக்கும் என கூறினார்.

குறிப்பாக, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு தோசை, பச்சைப் பயறு கிச்சடி உள்ளிட்ட உணவு வகைகள் எம்.பிக்களுக்குப் பரிமாரப்படும் என தெரிவித்த நரேந்திர சிங் தோமர், இதற்காக சிறப்பு உணவு தயாரிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள் என்றார். மேலும், இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசிய கண்டத்திலும், ஆப்ரிக்கக் கண்டத்திலுமே அதிக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசிய கண்டத்தில் இந்தியாவில்தான் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்ரிக்க கண்டத்தில் நைஜர், சூடான், நைஜீரியா ஆகிய நாடுகளில் மட்டும்தான் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE