ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

சோபியான்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை நிகழ்ந்த மோதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள மூஞ்ச் மார்க் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மூவரில் இருவர் குறித்த அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பெயர் லத்தீப் லோன், இவர் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் பெயர் உமர் நசிர், இவர் அனந்தநாக்கைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காஷ்மீரின் கூடுதல் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் பறிமுதல்: காஷ்மீர் பண்டிட் புரானா கிருஷ்ண பட் என்பவரைக் கொலை செய்த வழக்கில் லத்தீப் லோன் தேடப்பட்டு வந்தார். இதேபோல், நேபாலைச் சேர்ந்த தில் பகதூர் தபா என்பவரைக் கொன்ற வழக்கில் உமர் நசிர் தேடப்பட்டு வந்தார். கொலை செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கியும், 2 கைத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE