புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழகத்தை சேர்ந்த முத்துசாமி தீட்சிதர் மடம் அமைந்துள்ளது. இவரது மடம் ஸ்ரீ லிங்கேஸ்வரர் கோயில் என உ.பி.வாசிகளால் அழைக்கப்படுகிறது.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நவ. 19-ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இசையமைத்து பாடியதுடன் அதன் மேடையிலும் பிரதமர் முன்பாக இளையராஜா உரையாற்றினார். அப்போது அவர், முத்துசாமி தீட்சிதர் காசியில் நவாவர்ணம் பாடிபோது அவருக்கு தங்கவீணை அருளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இளையராஜா குறிப்பிட்ட இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதருக்கு வாரணாசியின் அனுமர் படித்துறை பகுதியில் ஒரு மடம் பல ஆண்டுகளாக உள்ளது.
இந்த மடத்தில்தான் முத்துசாமி தீட்சிதரின் குருநாதரான சிதம்பர யோகி நாதரும் வாழ்ந்திருந்தார். இதனுள், ஸ்ரீசக்கரலிங்கேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கத்தின் மீது ஸ்ரீயந்திரம் எனும் ஒரு சக்கரமும் உள்ளது. இதன் காரணமாக இந்த மடத்தை வாரணாசியில் ஸ்ரீசக்கரலிங் கேஸ்வரர் கோயில் என்றும் உ.பி.வாசிகள் அழைக்கிறார்கள்.
இந்த மடத்தில் பூசைகள் செய்து நிர்வகிக்கும் தமிழரான ஏ. கேதார் மகாதேவன் சாஸ்திரிகள் கூறியதாவது: "இந்த மடத்தின் கருவறை அருகில்தான் சிதம்பர யோகியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அவரை தனது குருவாக முத்துசாமி தீட்சிதர் ஏற்றிருந்தார். முத்துசாமி தீட்சிதர் தனது குருவான சிதம்பர யோகியுடன் ஆறு வருடங்கள் இதே மடத்தில் தங்கி அவரிடம் ஸ்ரீவித்யா உபாசனைகள் கற்று தவம் செய்தார். இந்த தவத்தை முத்துசாமி தீட்சிதர் அனுமர் படித்துறையில் செய்தபோதுதான் `தங்க வீணை' அருளப்பெற்றார்.
முத்துசாமி தீட்சிதரின் புகழ்பெற்ற ‘வாதாபி கணபதி பஜே..’கீர்த்தனையைத்தான் இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ் உள்ளிட்ட பலரும் பாடி வருகின்றனர்.
இந்த மடத்திற்கு இடையில் சுமார் 40 வருடங்கள் பூசை செய்யப்படாமல் இருந்தது.
91 வயது வரை வாழ்ந்த எனது தந்தையான அருணாச்சல சாஸ்திரிகள் இந்த மடத்தை அடையாளம் கண்டு பூசைகளை தொடர்ந்தார். அவருக்குப் பின் அப்புனிதப் பணியை நான் செய்து வருகிறேன். எங்கள் பூர்வீகம் தஞ்சாவூரின் தண்டாங்கோரை ஆகும். கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்த மடத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இசை உலகினர் இந்த மடம் குறித்து கேள்விப்பட்டு நேரில் வந்து முத்துசாமி தீட்சிதருக்கு மரியாதை செய்து வணங்கிச் செல்கின்றனர். இவர்களில் மல்லாடி சகோதரர்கள் முக்கியமானவர்கள். தீபாவளி அன்று முத்துசாமி தீட்சிதர் இம்மடத்தில் தன் சரீரத்தை தெய்வத்திற்கு தியாகம் செய்ததாகக் கருதப்படுகிறது. இதனால், அன்றையதினம்முத்துசாமி தீட்சிதருக்கு இம்மடத்தில் உற்சவம் நடத்தப்படுகிறது.
கொல்கத்தாவில் குருகுஹ கான வித்தியாலயா என்ற பெயரில் ஒரு பழமையான இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியானது தீட்சிதரின் பரம்பரையில் வந்தவர்களால் நடத்தப்படுகிறது. அங்கிருந்து சுமார் 25 மாணவர்கள், முத்துசாமி மடத்திற்கு வந்து உற்சவத்தில் கலந்து கொள்கின்றனர். அப்போது சில பாடல்களையும் பாடிச் செல்கின்றனர்.
இந்த மடம், அனுமர் படித்துறை பகுதியில் அமைந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டின் அருகில் அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 3-ல் பாரதி வீட்டுக்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தீட்சிதர் மடம் வந்திருந்தார். அவருடன் டாக்டர் சுதா சேஷய்யனும் இருந்தார். இவர்கள் தீட்சிதருக்கு சிறப்பு பூசை செய்து வணங்கிச் சென்றனர்.
இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகளுக்கு திருவையாறில் உள்ள நினைவு மண்டபம் போல், வாரணாசியில் உள்ள முத்துசாமி தீட்சிதரின் மடமும் தமிழர்களால் நினைவு கூரப்பட வேண்டும் என்பது உ.பி.வாசிகளின் விருப்பமாக உள்ளது.
இந்த மடம், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டின் அருகில் அமைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago