ரூ.500க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கும் ரூ.500க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராகுல் காந்தி முன்னிலையில் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைக்க இப்போதே பல பணிகளை செய்யத் தொடங்கியுள்ளது காங்கிரஸ். உட்கட்சி பூசல்கள் இருந்தாலும், அதையும் தாண்டி ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்கேற்ப, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தானை அடைந்துள்ளது. நேற்று அல்வார் பகுதியில் ராகுல் காந்தி யாத்திரை சென்றார். அப்போது பேசியவர், அசோக் கெலாட் அரசின் சாதனைகளை புகழ்ந்து பேசினார்.

இதேகூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு தயாராகி வருகிறேன். இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்கினார். ஆனால், அவற்றின் சிலிண்டர்கள் காலியாக உள்ளன. காரணம், சிலிண்டர் விலை ரூ. 1,040 வரை சென்றுவிட்டதுதான். எனவே, ராஜஸ்தான் அரசு இனி ஏழைகள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை தலா ரூ.500க்கு வழங்கும் என்பதை நான் கூற விரும்புகிறேன்" என்று அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE