ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மத்திய அரசின் போட்டி தேர்வர்களுக்கு தளர்வு: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மத்திய அரசு போட்டித் தேர்வர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தி பேசினார்.

இது குறித்து மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி பேசியதாவது. "மத்திய அரசு நடத்தும் குடிமைப்பணித் தேர்வான யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி, மற்றும் வங்கி ஆகிய போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் முறைப்படி கோரிக்கை மனுக்களை அனுப்பியும் அவற்றை கவனித்து அவர்களுக்கு உதவவில்லை. கரோனா காலகட்டத்தில் நாடு எப்படிப்பட்ட வாழ்வாதார நெருக்கடிகளை எல்லாம் சந்தித்தது என்பதை நாம் அறிவோம்.

குறிப்பாக, மாணவர்கள் கூடுதல் நெருக்கடிகளை சந்தித்தார்கள். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது. பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழு, ‘ஊரடங்கால் வாய்ப்பை இழந்த மத்திய அரசின் தேர்வெழுதும் இளைஞர்களுக்கு கருணை அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகளைக் கொண்டு வரவேண்டும்.கூடுதலாக ஒரு முறை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால் அரசு அதை நிராகரித்துவிட்டது.

இந்த அவையில் தெரிவித்த பதிலில் அதுபற்றி பரிசீலனையிலேயே இல்லை என்று அரசு தெரிவித்துவிட்டது. இத்தகைய போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு வருடத்துக்கு ஒரு மாணவருக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய தேர்வுகளுக்கு தயாராவதற்கு தம் குடும்பச் சூழலால், செலவுகள் அதிகம்.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு ஊரடங்கால் தேர்வு எழுதும் வாய்ப்புகளை இழப்பது என்பது அவர்களின் வாழ்க்கையில் பெரும் பிரச்சினையாகி விடுகிறது. ஊரடங்கு காரணமாக தேர்வு எழுதும் உரிமை வயது வரம்பின் பெயரில் பறிக்கப்படக் கூடாது.

எனவே, அம்மாணவர்களுக்கு வயது வரம்பை தளர்த்தி தேர்வு எழுத வாய்ப்பளிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE