கேழ்வரகு இட்லி, பச்சைப் பயறு கிச்சடி... - நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் சிறுதானிய விருந்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் சிறுதானிய விருந்து அளிக்கப்படும் என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சி காரணமாக அடுத்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. உலக அளவில் சிறுதானிய உற்பத்தியை அதிகரித்தல், சிறுதானிய உணவு வகைகளை கையாளுவதில் மேம்பட்ட உத்தியை பயன்படுத்துதல், சிறுதானிய உணவுகளை உண்ணும் பழக்கத்தை அதிகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு, 2023 தொடங்குவதற்கு முன்பாகவே, சர்வதேச சிறுதானிய ஆண்டை பிரபலப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் முன் முயற்சி காரணமாக நாளை நாடாளுமன்றத்தில் சிறதானிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் அனைவருக்கும் இந்த விருந்து அளிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்த விருந்தில் சிறுதானியங்கள் மட்டுமே இருக்கும் எனக் கூறினார்.

குறிப்பாக, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு தோசை, பச்சைப் பயறு கிச்சடி உள்ளிட்ட உணவு வகைகள் எம்.பிக்களுக்குப் பரிமாரப்படும் என தெரிவித்த நரேந்திர சிங் தோமர், இதற்காக சிறப்பு உணவு தயாரிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள் என்றார். மேலும், இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசிய கண்டத்திலும், ஆப்ரிக்கக் கண்டத்திலுமே அதிக அளவில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசிய கண்டத்தில் இந்தியாவிலும், ஆப்ரிக்க கண்டத்தில் நைஜர், சூடான், நைஜீரியா ஆகிய நாடுகளிலுமே சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE