“இந்தியாதான் சிறந்த இடம்... இதுதான் எனது நிரந்தர வீடு” - தலாய் லாமா

By செய்திப்பிரிவு

கங்க்ரா: இந்தியாதான் சிறந்த இடம் என்றும், இதுதான் தனது நிரந்தர வீடு என்றும் சீனாவுக்கு திரும்பிச் செல்லப் போவதில்லை என்றும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, திபெத்தை சீனா முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரும் அவரது சீடர்களும் தங்குவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் இடம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா விமான நிலையம் வந்த தலாய் லாமா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "உலகில் நிறைய விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை நான் பொதுவாகச் சொல்கிறேன். ஐரோப்பிய, ஆப்ரிக்க, ஆசிய கண்டங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவும்கூட தற்போது கூடுதல் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது. இது நல்லதுதான். ஆனால், நான் அங்கு திரும்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. நான் இந்தியாவில் இருப்பதையே விரும்புகிறேன். இதுதான் சிறந்த இடம். முன்னாள் பிரதமர் நேரு தேர்வு செய்த இடம் இது. இது எனது நிரந்தர வசிப்பிடம்" என்று தெரிவித்தார்.

தலாய் லாமா 2 அல்லது 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்க முடிவு செய்துள்ளார். அப்போது, அவர் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தலாய் லாமா, "வலது கையில் லேசான வலி இருக்கிறது. மற்றபடி பொதுவாக உடல்நிலை நன்றாகவே இருக்கிறது. எனினும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE