தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண முறை: மாநிலங்களவையில் பாஜக எம்.பி சுஷில் மோடி கடும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் என்பது சமூக கட்டமைப்பை உடைக்கும் செயல் என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லை விவகாரம்: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் 3-வது வாரத்தின் முதல் நாளான இன்று மாநிலங்களவை கூடியதும், இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இது குறித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நாம் அவையில் இது குறித்து விவாதிக்காமல் வேறு எது குறித்து விவாதிக்க வேண்டும்? இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாம் தயாராக வேண்டும்" என வலியுறுத்தினார். எனினும், மாநிலங்களவை தலைவர் இதை ஏற்க மறுத்ததை அடுத்து, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சுஷில் மோடி பேச்சு: இதையடுத்து, மாநிலங்களவையில் பேசிய பிஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி, ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதையும், இதையடுத்து, மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது சமூக கட்டமைப்பை உடைக்கும் செயல் என குறிப்பிட்டு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் வெறும் 2 நீதிபதிகள் இதுபோன்ற விவகாரங்களை தீர்மானித்துவிட முடியாது என தெரிவித்த சுஷில் மோடி, இது குறித்து நாடாளுமன்றத்திலும், சமூகத்திலும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சுதந்திர மனப்பான்மை கொண்ட சிலர், இதுபோன்ற விஷயங்களில் மேற்கத்திய நாடுகளை அப்படியே பின்பற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர் நுபுர் குமார் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "இரு வேறு பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு உள்ள அனைத்து உரிமைகளும் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கும் உள்ளது. ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதை ஏற்க மறுப்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 3-ல் உள்ள சட்டப்பிரிவு 14, 19, 21 ஆகியவை வழங்கி உள்ள அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது. என குறிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இது தொடர்பாக வேறு சிலர் டெல்லி, கேரள உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்திருந்த வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE