மர்மகோவா போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது

By செய்திப்பிரிவு

மும்பை: ஐஎன்எஸ் மர்மகோவா போர்க் கப்பல் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சர்வதேச அளவில் வலிமையான கடற்படையை கொண்டுள்ள 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி இந்திய கடற்படையில் 14 நீர்மூழ்கிகள் உட்பட 130 போர்க் கப்பல்கள் இருந்தன. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி இந்திய கடற்படையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. அதேநேரம் சீனாவிடம் சுமார் 350-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன.

சீனாவுக்கு இணையாக இந்திய கடற்படையை வலுப்படுத்த பிரதமர் மோடி முனைப்புடன் பணியாற்றி வருகிறார். அதன்படி 2027-ம் ஆண்டுக்குள் இந்திய போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அடுத்ததாக ஐஎன்எஸ் விஷால் என்ற அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.இது 2030-ம் ஆண்டில் கடற்படையில்இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு புராஜக்ட் 15பி, புராஜக்ட்-75, கல்வாரி நீர்மூழ்கி என்பன உள்ளிட்ட திட்டங்களின் கீழ் சுமார் 45-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன.

புராஜக்ட் 15 பி திட்டத்தின் கீழ் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் 4 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல் 2021 நவம்பரில் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதே ரகத்தை சேர்ந்த 2-வது போர்க்கப்பலான ஐஎன்எஸ் மர்மகோவா கடந்த 2016-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து மும்பை கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த விழாவில் ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடியின் இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப் போம் ஆகிய தொலைநோக்கு திட்டங்கள் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து போர்க் கப்பல்களை வாங்கினோம். இப்போது சுயசார்புஇந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப் படுகின்றன. இந்த வரிசையில் ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு கடற்படையில் இணைக்கப் பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நட்பு நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் போர்க்கப்பல்களை நாம் விற்பனை செய்வோம்.

நாட்டின் பாதுகாப்பில் கடல் எல்லை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதேபோல நாட்டின் வளர்ச்சியில் கடல்வழி போக்குவரத்து மிகவும்முக்கியமானது. நாட்டின் கடல் எல்லையைக் காவல் காத்து, பாதுகாப்பான சரக்கு போக்குவரத்தையும் இந்திய கடற்படை உறுதி செய்கிறது. இதற்காக கடற்படை வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

பாதுகாப்பான எல்லை, பாதுகாப்பான கடல் எல்லைகளால் இந்தியாவின் வெற்றிப் பயணம் ஏறுமுகத்தில் தொடர்கிறது. இதை கருத்தில் கொண்டுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன ஆயுதங்கள் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் திறனை பாதுகாப்புப் படைகள் பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்

ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் 163 மீ்ட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 7,400 டன் எடை கொண்டதாகும். கோவா மாநிலத்தின் மர்மகோவா நகரின் பெயர் போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போர்க்கப்பலை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம். இது மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் செல்லும். அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 450 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்.

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் பராக் -8 வகையை சேர்ந்த அதிநவீன ராக்கெட்டுகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. அணு ஆயுத தாக்குதல், உயிரி ஆயுத தாக்குதல், ரசாயன தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் போர்க்கப்பலில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 300 வீரர்கள் கப்பலில் பணியாற்றுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் போர்க்கப்பல்களுக்கு இணையாக ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE