அத்துமீறும் சீனாவை தண்டிக்காத மோடி அரசு: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 9-ம் தேதி அருணாச்சல் எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து விரட்டினர். இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டன.

இந்நிகழ்வை சுட்டிக்காட்டி அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய அரசை விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் பேசிய அவர், “ சீனா தொடர்ந்து எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டு இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. பதிலுக்கு அந்நாட்டைத் தண்டிக்காமல் மோடி அரசு வெகுமதி வழங்குகிறது. 2020-21 நிதி ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியா 65 பில்லியன் டாலர் (ரூ.5.33 லட்சம் கோடி) மதிப்பில் பொருள்களை வாங்கியது. மறு ஆண்டில் 95 பில்லியன் டாலருக்கு (ரூ.7.79 லட்சம் கோடி) சீனாவிடமிருந்து பொருள்களை இந்தியா வாங்கியுள்ளது.

உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்காமல், மத்திய அரசு சீனாவை சார்ந்து இருக்கிறது. நடைமுறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இவ்வளவு பிரச்சினை இருக்கிறது. ஆனால், எல்லாம் சரியாக இருப்பதாக மத்திய அரசு கூறிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு உண்மையில் நம் ராணுவ வீரர்கள் மீது எந்தக் அக்கறையும் இல்லை” என்று விமர்சித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE