கடந்த 5 ஆண்டுகளில் மத்திய ஆயுதப்படைகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்ப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய ஆயுதப்படைகளில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாக, மத்திய ஆயுதப் படைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 9 ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எப்) கடந்த 5 ஆண்டுகளில் 30,565 வீரர்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) 27, 228 வீரர்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) 17,654 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

1,71,300 பணியிடங்கள் காலி..

மத்திய ஆயுதப்படைகளில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 1,71,300 வீரர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிஆர்பிஎப்-ல் 26,679, பிஎஸ்எப்-ல் 21,493, சிஐஎஸ்எப்-ல் 11,765, சசாஸ்த்ர சீமா பால்(எஸ்எஸ்பி)-ல் 11,765 அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் 7,974, இந்தோ திபெத் எல்லை போலீஸ் படையில்(ஐடிபிபி) 4,200 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்திய ஆயுதப்படைகளில் உள்ள வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 லட்சம். இவர்களில் பிஎஸ்எப் படையினர் இந்தியா-பாகிஸ்தான் இடையேயுள்ள 3,323 கி.மீ தூர எல்லையிலும், இந்தியா - வங்கதேசம் இடையேயுள்ள 4,096 கி.மீ தூர எல்லையிலும் காவல் பணி மேற்கொள்கின்றனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்நாட்டு பாதுகாப்பு பணியில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத தடுப்பு நடவடிக் கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

சிஐஎஸ்எப் படையினர் அணுமின் நிலையங்கள், முக்கிய தொழிற்சாலைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கிய அரசு கட்டிடங்களில் காவல் பணி மேற்கொள்கின்றனர்.

ஐடிபிபி படையினர் இந்தியா-சீனா இடையேயுள்ள 3,488 கி.மீ தூர எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். எஸ்எஸ்பி படையினர் 1,751 கி.மீ தூரத்துக்கு உள்ள நேபாள எல்லையிலும் , 699 கி.மீ தூரத்தில் உள்ள பூடான் எல்லையிலும் காவல் பணியில் ஈடுபடுகின்றனர்.

மத்திய ஆயுதப் படைகளில் உள்ள வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 லட்சம். இவர்களில் பிஎஸ்எப் படையினர் பாகிஸ்தான்,வங்கதேச எல்லையில் பணியாற்றுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE