பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்: தமிழ் பயிலும் வடமாநில மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

By ஆர்.ஷபிமுன்னா

பனாரஸ் இந்து பல்கலைக்கழக (பிஎச்யூ) மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது, இங்கு தமிழ் பயிலும் வட இந்திய மாணவர்களை ராஜ்பவன் விருந்தினர்களாக 10 நாள் தமிழகம் வந்து செல்லுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

தமிழகத்துடன் காசி எனும் வாரணாசிக்கு உள்ள உறவை புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்த நிகழ்ச்சி ஒருமாதம் நடைபெற்றது. இதன் நிறைவுவிழா டிசம்பர் 16-ல் நடைபெற்றது. இதற்காக மூன்று நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வாரணாசி வந்திருந்தார். இவர் தனது கடைசி நிகழ்ச்சியாக நேற்று, காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்ற பிஎச்யூவின் தமிழர்களுடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் செய்தி சேகரிப்புக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி, இந்திய மொழிகள் துறை மற்றும் மாளவியா அமைதி மற்றும் அறநெறி மையம் சார்பில் நடைபெற்றது. இதில் மையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சஞ்சய் குமார் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ப் பிரிவின் உதவிப் பேராசிரியர் ச.ஜெகதீசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முனைவர் சு.விக்னேஷ் ஆனந்த் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துரையாடலுக்கு வந்துள்ள மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்படி ஆளுநர் ரவி கேட்டுக் கொண்டார். இவர்களில் பலர் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் பிஎச்யூவின் நவீன இந்திய மொழிகள் துறையில் உள்ள தமிழ்ப் பிரிவில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள். இதை கேட்டு வியப்படைந்த ஆளுநர் ரவி, எவரும் எதிர்பாராத ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும்போது, “இங்கு தமிழ் பயிலும் தமிழர் அல்லாத வடமாநில மாணவர்களை தமிழகத்திற்கு வருகை தருமாறு நான் அழைக்கிறேன். இனி வருடந்தோறும் தமிழ்நாட்டின் ராஜ்பவனுக்கு மாணவர்கள் விருந்தினர்களாக வரலாம். ஒவ்வொரு குழுவாக வரும் மாணவர்களுக்கான செலவுகளை ராஜ்பவன் ஏற்கும். இதன்மூலம், அவர்கள் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை நேரில் அனுபவித்து மகிழலாம்” என்றார்.

இந்த அறிவிப்பை அரங்கில் கூடியிருந்த தமிழ் பயிலும் வடமாநில மாணவர்கள், தமிழர்களான பிஎச்யூ ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் வாரணாசி ஐஐடி மாணவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். தமிழர் அல்லாதவர்களுக்கு இதுபோல் அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய கல்விக் கொள்கையின்படி, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் அடிப்படையில் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமத்தின் தாக்கமாக இது பார்க்கப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் வீ பாட்டீலும் கலந்துகொண்டார். சிறப்பு அழைப்பாளர் களாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன், சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தீஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநர் ரவி விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டார்.

முழுமையாக தமிழ் கற்பேன்

நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ரவி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறுகையில், “தமிழ்நாட்டின் ராஜ்பவனுக்கு வரும்படி பிஎச்யூ மாணவர்களுக்கு அழைப்பு விடுத்ததுபோல் டெல்லி உள்ளிட்ட இதர தேசியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிலும் வடமாநில மாணவர்களுக்கும் படிப்படியாக அழைப்பு விடுப்பேன். இவர்களுடன் கலந்துரையாடல் நடத்துவேன். தமிழ் மீதான ஆர்வத்தால் அம்மொழியை நான் பயின்று வருகிறேன். விரைவில் முழுமையாக கற்றுக்கொள்வேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்