திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - முதல் திருநங்கை நீதிபதி ஆலோசனை

By செய்திப்பிரிவு

இந்தூர்: மேற்கு வங்கத்தில் 2017-ல் இஸ்லாம்பூர் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஜோயிதா மொந்தல். இவர்தான் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி. அதன்பின் 2018-ம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் லோக் அதா லத்தில் திருநங்கை வித்யா காம்ப்ளே நீதிபதியானார். அதே ஆண்டில், குவாஹாத்தியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா 3-வது திருநங்கை நீதிபதியானார்.

இந்நிலையில் இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த கலாச்சார விழாவில் நீதிபதி ஜோயிதா மொந்தல் கூறியதாவது: அரசு வேலைகளில் திருநங்கை சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு வழங்குவது மிக முக்கியம். இடஒதுக்கீடு மூலம் காவல் துறைமற்றும் ரயில்வேயில் திருநங்கைகள் சேர்ந்தால், அது அவர்களை முன்னேற்றுவதுடன் அவர்கள் மீதான சமுதாயத்தின் பார்வையும் மாறும்.

திருநங்கைகளின் பிரச்சினைகளில் அதிகாரிகள் உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும். நாட்டில் திருநங்கைகளுக்கு போதிய அளவில் காப்பகங்கள் தேவை. இவ்வாறு நீதிபதி ஜோயிதா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE