கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து சரிதா எஸ் நாயர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி.சுனீரைவிட 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெற்றார்.

இதனிடையே 2019 தேர்தலில் வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய 2 தொகுதிகளில் சரிதா எஸ் நாயர் மனு தாக்கல் செய்தார். சோலார் பேனல் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதாகக் கூறி அவரது மனு 2 தொகுதியிலும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் சரிதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, சரிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில், வயநாடு தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், சரிதா தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கு (காணொலி) முறையாக ஆஜராகவில்லை எனக் கூறி 2020-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி சரிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது கரோனா ஊரடங்கு காரணமாக காணொலி மூலம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தங்கள் தரப்பு வழங்கறிஞர் விசாரணைக்கு ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அந்த மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் சரிதா கோரிக்கை வைத்தார்.

இதன்படி இந்த மனு நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “மனுதாரரின் கோரிக்கையை ஏற்று இந்த மனுவை ஏற்கிறோம். ஆனால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடுவதற்கான முகாந்திரம் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE