இடதுசாரி தீவிரவாதம் மீண்டெழ விடக்கூடாது: கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டத்தில் அமித் ஷா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: இந்தியாவின் கிழக்கு மண்டலத்தில் இடதுசாரி தீவிரவாதம் ஏறக்குறைய முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது என்றும், அது மீண்டும் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

கிழக்கு மண்டலக் குழு கூட்டம்: இந்தியாவின் கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களின் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரண், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஒடிசாவின் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சகம் அறிக்கை: இந்தக் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம் நேர்மறையான சூழலுடன் கொல்கத்தாவில் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அமித் ஷா பேச்சு: கிழக்கு மண்டலக் குழு கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கிழக்கு மண்டல மாநிலங்களில் இருந்து வந்த இடதுசாரி தீவிரவாதம் ஏறக்குறைய முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அது மீண்டும் எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி கிழக்குப் மண்டல மாநிலங்களிலும் ஏற்பட வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் அவர், "தற்போது போதைப்பொருள் புழக்கம் நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான கூட்டங்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இவற்றில் 93 சதவீத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. கடந்த 2006 முதல் 2013 வரையிலான 8 ஆண்டுகளில் மண்டல அளவில் 6 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டன. ஆனால், 2014-க்குப் பிறகான 8 ஆண்டுகளில் 23 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சராசரியாக ஆண்டுக்கு 3 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE