நமது ராணுவத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கிறது ராகுல் காந்தியின் பேச்சு: ஜெ.பி.நட்டா கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, நமது ராணுவத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "இந்திய ராணுவத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசி இருக்கிறார். அவரது பேச்சு, நமது ராணுவத்தின் நம்பிக்கையை குலைக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் அது போதாது. நமது ராணுவம் வீரத்திற்கும் பராக்கிரமத்திற்கும் பெயர் பெற்று விளங்குகிறது. சீன கம்யூனிச கட்சியுடன் காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு செய்து கொண்டதை நாம் அறிவோம்.

டோக்லாமில் சீன ராணுவத்திற்கு எதிராக நமது ராணுவம் துணிவுடன் நின்றபோது, சத்தமில்லாமல் இந்தியாவில் உள்ள சீன தூதரகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்தவர் ராகுல் காந்தி. அதுமட்டுமல்ல, பாகிஸ்தானுக்குள் நுழைந்து நமது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியபோது, அதனை கேள்விக்குள்ளாக்கியவர்கள் யார் என்பதை நாம் அறிவோம். ராகுல் காந்தி இந்தியாவின் குரலாக ஒலிக்கவில்லை. அவர், பாகிஸ்தானுக்கான குரலாக ஒலிக்கிறார். ராகுல் காந்தியின் இத்தகைய பேச்சு கண்டனத்திற்கு உரியது. நமது நாட்டின் மீதான ராகுல் காந்தியின் சிந்தனை எத்தகையது என்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது" என தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத் பேட்டி: ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "ராகுல் காந்தியின் பேச்சு அறிவார்ந்தது அல்ல. அவரது பேச்சு, தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கக்கூடியது. இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். தனது பேச்சுக்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். மீண்டும் மீண்டும் நாட்டை சிக்கலில் தள்ளும் செயலை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டும்" என குறிப்பிட்டார்.

சுக்விந்தர் சிங் ஆதரவு: ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, "ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையால் பாஜக அச்சமடைந்திருக்கிறது. அவரது பேச்சு நாட்டுக்கு எதிரானது அல்ல. நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தின் குரல் அது" என தெரிவித்துள்ளார்.

என்ன பேசினார் ராகுல் காந்தி? - முன்னதாக, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அதன் 100-வது நாளை முன்னிட்டு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால், இதனை நமது அரசு ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைத்து வருகிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE