“எந்த ஒரு வழக்கும் சாதாரணமானது அல்ல” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு எந்த ஒரு வழக்கும் சாதாரணமானது, சிறியது என்பது இல்லை என்றும், தனிமனித சுதந்திரத்தில் தலையீடு செய்யாமல் இருப்பது தவறான நீதிக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரையில் இந்த வழக்கு சிறிய வழக்கு, இந்த வழக்கு பெரிய வழக்கு என்று எந்த வழக்கும் கிடையாது. நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கும், சுதந்திரம் குறித்த கண்ணீருக்கும் பதில் அளிக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். இது எதுவும் ஒருமுறை மட்டும் நடத்தப்படும் வழக்கு இல்லை. தனிமனித சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் நாங்கள் தலையிட்டு நிவாரணம் வழங்கவில்லை என்றால், இங்கே இருந்துகொண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி பி.எஸ்.நரசிம்மாவுடன் இணைந்த அமர்வில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இக்ரம் என்பவருக்கு மின்சாரம் திருடியது தொடர்பாக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தண்டனை தொடர்பான வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மின்சார திருட்டு வழக்கை கொலை வழக்காக மாற்ற முடியாது. நீதி மறுக்கப்படும்போது அதில் தலையீடு செய்யாமல் இருந்தால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 136 நீதிமன்றத்திற்கு வழங்கிய கடமையில் இருந்து அது தவறுவதாக அர்த்தமாகிவிடும்.

குடிமக்களின் உரிமையை பாதுகாக்க நீதிமன்றம் தலையிடுவது என்பது சட்டப்பிரிவு 136 வழங்கியுள்ள அரசியலமைப்பு உரிமையாகும். தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள விலைமதிப்பில்லாத, தவிர்க்க முடியாத உரிமையாகும்" என்றார்.

நாட்டின் எந்த ஒரு நீதிமன்றம், தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு குறித்து மேல் முறையீட்டை எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு சட்டப்பிரிவு 136 வழங்குகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து, மாநிலங்களைவையில் மத்திய சட்ட அமைச்சர், வழக்குகள் தேங்குவதை தவிர்க்க பிணை வழக்குகளை விசாரிப்பதை உச்ச நீதிமன்றம் தவிர்க்கலாம் என்று பிரிந்துரைத்த பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "உச்ச நீதிமன்றம் பிணை வழங்குவது போன்ற வழக்குகளை தவிர்த்து அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேங்குவதை தவிர்க்கலாம்” என்றார். மேலும் நீதிபதிகள் நியமனம் குறித்து பேசிய அவர், நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியம் முறையை விமர்சித்திருந்தார். அத்துடன், நீதிமன்றங்களில் நீண்ட விடுமுறைகள் விடப்படும்போது அது நீதிக்காக நீதிமன்றங்களை நாடுபவர்களை மிகவும் பாதிப்பதாக மக்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால விடுமுறையின்போது வரும் வழக்குகளை விசாரிக்க கோடைக்கால பெஞ்சுகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற நடைமுறை குளிர்கால விடுமுறையின்போது பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE