மின்சார திருட்டு வழக்கில் 18 ஆண்டு சிறையா? - உச்ச நீதிமன்றம் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த இக்ராம் என்பவர் மின்சாரத் திருட்டு வழக்கில் கடந்த 2019-ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தனித்தனியே விசாரணை நடைபெற்றது. அனைத்து வழக்கிலும் கடந்த 2020-ல் ஒரே நாளில் தண்டனை விதிக்கப்பட்டது. ஒவ்வொரு வழக்கிலும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனையை தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கு எதிராக இக்ராம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார். இதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து இக்ராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இக்ராமுக்கு விதிக்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதைச் செய்யாவிட்டால் குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்று தெரிவித்த நீதிமன்றம், குற்றவாளி தவறாக தண்டிக்கப்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் கவனித்திருக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தது. இக்ராம் ஏற்கெனவே 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால் விடுதலையாக உள்ளார்.

விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கைக்கு உ.பி. அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தலைமை நீதிபதி, “மின்சார திருட்டை கொலை குற்றத்துக்கு சமமாக கருதக் கூடாது. இத்தகைய மனுதாரர்களின் அழுகுரலை கேட்கவே உச்ச நீதிமன்றம் உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE