நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறைக்கு ஆர்.ஜே.டி எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் தற்போதைய கொலீஜியம் முறைக்கு ராஷ்டீரிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் மனோஜ் ஜா பேச்சு: இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அக்கட்சியின் உறுப்பினர் மனோஜ் ஜா, "நீதிபதிகளை நியமிப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள கொலீஜியம் முறை மாற்றப்பட வேண்டும். இதற்கு மாற்றாக மத்திய அரசு ஏற்கெனவே கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை, புதிய திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும். ஏனெனில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கீழ் நீதிபதிகள் நியமிக்கப்படும்போது அதில் இட ஒதுக்கீட்டு முறை இல்லை. எனவே, புதிய திருத்தங்களை செய்த அந்த மசோதாவை மத்திய அரசு மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

கிரண் ரிஜிஜு பேச்சு: கொலிஜியம் முறை மாற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளமும் இதற்கு ஆதரவாக பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. எனினும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என கடந்த 8ம் தேதி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிபட தெரிவித்திருந்தார்.

அதோடு, இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய கிரண் ரிஜிஜு, "நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். நீதிபதிகள் நியமன முறைதான் இதற்கு அடிப்படை காரணம். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு மிகச் சிறிய அளவுதான் பங்கு இருக்கிறது. கொலீஜியம்தான் பெயர்களை பரிந்துரைக்கிறது. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.

தரமான, இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய வழக்கறிஞர்களை பரிந்துரைக்கும்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால், தற்போதைய கொலீஜியம் முறை, நாடாளுமன்றத்தின் உணர்வுகளையோ அல்லது மக்களின் உணர்வுகளையோ பிரதிபலிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அப்படித் தெரிவித்தால், அரசு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாகக் கருத நேரிடும். ஆனால், நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது. 1993-ல் தான் இது மாற்றப்பட்டது. கொலீஜியம் நடைமுறையை மாற்றாவிட்டால், காலி பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE