உக்ரைன் போர் முடிவுக்கு வர பேச்சுவார்த்தையே ஒரே வழி - ரஷ்ய அதிபர் புதினிடம் தெரிவித்த பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உக்ரைன் போர் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட பேச்சுவார்த்தையும் தூதரக ரீதியிலான நடவடிக்கையுமே ஒரே வழி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்று (டிச. 16) தொலைபேசி மூலம் உரையாடியதாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இருவரும் பேசியது குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி மூலம் உரையாடினர். அப்போது, எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு குறித்து இருவரும் விவாதித்தனர்.

கடந்த செப்டம்பர் 16-ம் தேதி சமர்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இருவரும் சந்தித்து பேசியதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த உரையாடலின்போது, ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்தியாவின் முன்னுரிமைகள் குறித்து புதினிடம் பிரதமர் மோடி விளக்கினார்.

உக்ரைன் போர் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட பேச்சுவார்த்தையும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளும் ஒரே வழி என விளாடிமிர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE