இந்திய விமானப் படையிடம் 36-வது ரஃபேல் போர் விமானம் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

அதில் முதல்கட்டமாக கடந்த 2020-ம் ஆண்டு, ஜூலையில் 5 விமானங்கள் அம்பாலா விமானப் படைதளத்துக்கு வந்து சேர்ந்தன. அதன்பிறகு படிப்படியாக 30 விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு ரஃபேல் விமானத்தை மட்டும் பிரான்ஸ் வழங்க வேண்டியிருந்தது. தற்போது அந்த விமானமும் இந்தியாவை வந்தடைந்துள்ளது.

இதுகுறித்து விமானப் படை ட்விட்டரில் நேற்று, "ஒப்பந்தம் முழுமை பெற்றது. பிரான்ஸிடமிருந்து இறுதியாக வரவேண்டிய 36-வது ரஃபேல் விமானம் இந்திய விமானப் படையை வந்தடைந்துள்ளது. பிரான்ஸில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்துக்கு வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் டேங்கர் விமானம் எரிபொருள் நிரப்பியது" என கூறப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானத்தை வாங்கும் ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவமாகும். குறிப்பாக, இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் நாடுகளுக்கு இது அதிர்ச்சியளிக்கும் செய்திஎன பாதுகாப்பு துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஃபேல் போர் விமானத்தில் ரேடார் எச்சரிக்கை ரிசீவர்கள், கண்காணிப்பு அமைப்பு, ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE