நாடாளுமன்றத்தில் அமளி - 40 நிமிடங்களில் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதல், பிஹாரில் கள்ளச்சாரயம் குடித்து 39 பேர் உயிரிழந்த விவகாரம் ஆகிய பிரச்சினைகள் எழுப்பப்பட்டதால் மாநிலங்களவை 40 நிமிடங்களில் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய - சீன ராணுவ மோதல்: அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9 ஆம் தேதி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கம்புகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. இதனால், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி: இந்த மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கடந்த 13ம் தேதி விளக்கம் அளித்தார். எனினும், இது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று எழுப்பின. அப்போது மாநிலங்களவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திய ஹரிவன்ஷ், இது குறித்து விவாதிக்க அனுமதி இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை: இந்நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இன்றும் எழுப்பின. அவையை நடத்திய துணைத் தலைவர் ஷரிவன்ஷ், இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதேநேரத்தில், பிஹாரில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த விவகாரத்தை பிஹாரைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு அவை கூடிய நிலையில், உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக 40 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE