“அடுத்த ஆண்டு கடினமாக இருக்கும்...” - இந்திய பொருளாதாரம் குறித்து ராகுலிடம் ரகுராம் ராஜன் விவரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "இந்தியா மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும்" என காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் விவரித்துள்ளார்.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். அவர் ராகுல் காந்தியுடன் உரையாடல் நடத்தினார். அப்போது இந்திய பொருளாதாரம் குறித்து இருவரும் உரையாடினர். இந்திய பொருளாதாரம் குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில் "முக்கியமான வட்டி விகிதங்களின் உயர்வு, ஏற்றுமதிகள் குறைந்து வரும் நிலையில். அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியை எட்டுவதற்கு மிகவும் சிரமப்படும்.

அடுத்த ஆண்டில் நாம் 5 சதவீத வளர்ச்சியை அடைந்தால், அது நமது அதிர்ஷ்டம். வளர்ச்சியை எந்த மதிப்பீட்டில் அளவிடுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மோசமான காலாண்டை கொண்டிருந்தது. அதன் மதிப்பில் வளர்ச்சியைக் கணக்கிட்டால் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாகவே தெரியும். குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக்கு முன்னர் 2019-ஆம் ஆண்டையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படியே அதனை தலைகீழாக 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டீர்கள் என்றால் வருடத்திற்கு 2 சதவீதம் வளர்ச்சியாக இருக்கும். ஆனால், அது நமக்கு மிகவும் குறைவு.

மந்தமான வளர்ச்சிக்குக் காரணம், கரோனா பெருந்தொற்றும் ஒரு பகுதியாக இருக்கிறது. பெருந்தொற்று ஊரடங்கிற்கு முன்னர் இந்தியா மந்தமாக வளர்ந்து வந்தது. வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய நாம் தவறி விட்டோம்.

தற்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மத்திய மேல்வர்க்கத்தினர் வீட்டில் இருந்தபடி வேலை செய்ததால் அவர்களின் வருமானம் உயர்ந்தது. ஆனால் தொழில்சாலைகளில் வேலை பார்த்தவர்கள் தங்களின் வருமானத்தினை இழந்தனர். இதனால் ஊரடங்கு காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்தது. வசதி படைத்தவர்களுக்கு சிக்கல் இல்லை. கீழ்வர்க்கத்தினருக்கு ரேஷன் மற்றும் பிற பொருள்கள் கிடைத்தன. ஆனால், கீழ் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். பலர் வேலையிழந்தனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. திட்டங்களை வகுப்பவர்கள் இந்த வர்க்கத்தினரை கவனத்தில் கொள்ளவேண்டும்" என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுராம் ராஜன் கலந்துகொண்டது குறித்து பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் குறித்த அவரின் கருத்துகள் சந்தர்ப்பவயமானது என்பதால், அவை நிராகரிக்கப்பட வேணடியவை என்று தெரிவித்திருந்தது.

பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறையின் தலைவர் விஜய் சவுதாய்வாலே தனது ட்விட்டர் பக்கத்தில், "ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் (மன்மோகன் சிங்) பிரதமராக இருந்தார். விளைவு, இந்த தேசம் 10 பொன்னான ஆண்டுகளை இழந்துவிட்டது. இந்தியா இந்த தவறை மீண்டும் செய்யாது. மோடிக்கு நன்றி. ரகுராம் ராஜன் டெல்லியில் இருந்து சிகாகோ வரை நடந்தே செல்லலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, "ஒட்டுமொத்த அமைச்சரவையும், பொருளாதார நிபுணரின் திறமைக்கு ஈடாகாது" என்று தெரிவித்துள்ளது.

பாஜகவின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி உரையாடல் நடத்தினால் பாஜக ஏன் கோபப்படுகிறது? ஏனென்றால், பிரதமர் மோடி ஒருபோதும் பொருளாதார வல்லுநர்களை சந்தித்ததில்லை. அவர்களும் பிரதமரை எளிதில் அணுகமுடிவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE