இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு - 17 எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய - சீன எல்லை மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் 17 எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்திய - சீன ராணுவ மோதல்: அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கம்புகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. இதனால், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி: இந்த மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கம் அளித்தார். எனினும், இது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும், மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எல்லையில் நிகழ்ந்த இந்திய - சீன மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், இதற்காக கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விவாதம் நடத்த அனுமதி மறுப்பு: அப்போது மாநிலங்களவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திய ஹரிவன்ஷ், இது குறித்து விவாதிக்க அனுமதி இல்லை என தெரிவித்தார். மேலும், கேள்வி நேரத்தையும் அவர் தொடங்கினார். கேள்வி நேரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. ஃபாஜியா கான், இந்திய - சீன மோதல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறிக்கிட்ட ஹரிவன்ஷ், இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி இல்லை என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: இந்திய - சீன மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், தெலுகு தேசம் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் கேள்வி நேரத்தின்போது அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி, "வெளிநடப்பில் ஈடுபட்டுள்ள 17 எதிர்க்கட்சிகளும் நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளன. அதேநேரத்தில், எல்லைப் பிரச்சினையைப் பொருத்தவரை அதில் சமரசத்திற்கு இடமில்லை. அனைத்தையும்விட நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்" என தெரிவித்தார். சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு ஏன் தயாராக இல்லை என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE