ரகுராம் ராஜன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டது ஆச்சர்யமில்லை - அமித் மாளவியா 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தன்னை அடுத்த மன்மோகன் சிங்காக கருதிக்கொள்ளும் ரகுராம் ராஜன் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொண்டதில் ஆச்சர்யமில்லை என்று பாஜகவின் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். இதுகுறித்து தற்போது பாஜகவினர் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவின் ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அவர் தன்னை அடுத்த மன்மோகன் சிங்காக நினைத்துக்கொள்கிறார். இந்திய பொருளாதாரம் குறித்த அவரின் கருத்து நிராகரிக்கப்பட வேண்டியது. அது சந்தர்ப்பவாதமான கருத்து" என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி , "ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தன்னை நியமித்ததற்கான நன்றிக்கடனை திருப்பி செலுத்தும் விதத்தில் ரகுராம் ராஜன், ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இணைந்துள்ளார். அவர் பெரிய பொருளாதார நிபுணராக மிதவாதிகளால் போற்றப்பாட்டார். ஆனால் அவர் தற்போது போலி காந்தியவாதிகளின் மற்றொரு அணிகலனாக மாறிவிட்டார்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆவது ஆளுநராக 2013 முதல் 2016 வரை பணியாற்றினார். இன்று (டிச.14) இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி, "ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார். வெறுப்பு விதைப்பவர்களுக்கு எதிராக நாட்டின் ஒற்றுமைக்காக மக்கள் காட்டும் ஆதரவு நாம் வெற்றி பெற்றதை காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE