இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தியுடன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்பு 

By செய்திப்பிரிவு

ஜெய்பூர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புதன்கிழமை கலந்து கொண்டார்.

காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதி பகுதியில் இருந்து புதன்கிழமை மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்தார்.

ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சித்திருந்தார். இந்திய பொருளாதாரம் குறித்தும் கடந்த காலங்களில் கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று தற்போது ராஜஸ்தானை கடந்து வருகிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது.

இந்தநிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் 16-ம் தேதி 100-வது நாளை எட்ட உள்ளது. அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டுள்ளது. யாத்திரையின் 100 நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜெய்பூரில் பாடகி சுனிதி சவுகானின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE