புதுடெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்லைபகுதியில் அத்துமீறல் முயற்சிகள் முறியடிக்கப்படும் என்று நாடாளுமன்ற அவைகளில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய, சீன எல்லை நீள்கிறது. இந்த எல்லையில் இந்திய - திபெத் எல்லை காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1996 மற்றும் 2005-ல் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, எல்லையில் காவல் காக்கும் இந்திய, சீன வீரர்கள் ஆயுதங்களை பயன்படுத்துவது இல்லை.
எனினும் லடாக், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேச எல்லை பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறும்போது கைகலப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2020 ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் உயிரிழந்தனர். ஆனால், தங்கள் தரப்பில் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன அரசு கூறி வருகிறது.
600 சீன வீரர்கள் விரட்டியடிப்பு: இந்த சூழலில், கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லை பகுதியில் 600-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய தரப்பில் 6 வீரர்கள் காயமடைந்தனர். சீன தரப்பில் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். சீன வீரர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய வீரர்களின் பதிலடியால் சீன வீரர்கள் பின்வாங்கி, தங்கள் நிலைகளுக்கு திரும்பினர்.
கடந்த 9-ம் தேதி மோதல் நடந்த நிலையில், இதுதொடர்பாக இந்திய ஊடகங்களில் கடந்த 12-ம் தேதி செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்திய, சீன வீரர்கள் மோதல் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. ‘இரு அவைகளிலும் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு எல்லை பிரச்சினை குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். அவைகளில் விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மக்களவையில் பகல் 12 மணிக்கும், மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுதொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கு நடுவே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பிரிவு, யாங்சி பகுதியில் உள்ள எல்லை கோட்டை தாண்ட சீன வீரர்கள் கடந்த 9-ம் தேதி முயற்சி செய்தனர். தன்னிச்சையாக எல்லை நிலையை மாற்றவும் முயன்றனர். சீன வீரர்களின் இந்த முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைவதை இந்திய வீரர்கள் தீரத்துடன் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்திய தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை. இந்திய ராணுவ தளபதிகள் சரியான நேரத்தில் தலையிட்டதால் சீன வீரர்கள் தங்கள் நிலைகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தளபதிகள் பேச்சுவார்த்தை: இதன் தொடர்ச்சியாக, சீன ராணுவ பிராந்திய தளபதியுடன் இந்திய ராணுவத்தின் பிராந்திய தளபதி கடந்த 11-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். ‘எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது. அமைதியையும், இணக்கமான சூழலையும் நிலைநாட்ட வேண்டும்’ என்று சீன தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூதரகம் மூலமாகவும் இதுபற்றி சீன தரப்பிடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராணுவம் உறுதிபூண்டுள்ளது. அத்துமீறல் முயற்சிகள் முறியடிக்கப்படும் என்று அவையில் உறுதிஅளிக்கிறேன். இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் முழு ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ‘பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எங்கள் கோரிக்கைகளை ஏற்க அரசு தயாராக இல்லை. நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் மோடி அரசு நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும்’’ என்றார்.
உயர்நிலை ஆலோசனை: இந்நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய, சீன எல்லை நிலைமை ஸ்திரமாக உள்ளது. தூதரக, ராணுவ நிலையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் இரு தரப்பும்பதற்றத்தை தணித்து வருகின்றன. ஏற்கெனவே செய்த ஒப்பந்தங்களை இந்தியா முறையாக அமல்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச எல்லையில் ஏற்பட்ட மோதல்குறித்து இதில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கண்காணிப்பு பணியில் போர் விமானங்கள்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் எல்லை பகுதியில் கடந்த சில வாரங்களாகவே சீன ட்ரோன்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் தவாங் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது: வடகிழக்கில் இந்திய விமானப்படை மிகவும் வலுவாக உள்ளது. அசாமின் தேஜ்பூர், சாபா பகுதிகளில் சுகோய் ரக போர் விமானங்களும், மேற்கு வங்கத்தின் ஹாசிமாராவில் ரஃபேல் போர் விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய எல்லைக்குள் எதிரிகளின் ட்ரோன்கள், போர் விமானங்கள் நுழைந்தால் சுட்டு வீழ்த்த தயார் நிலையில் உள்ளோம். இந்திய ராணுவ நிலைகள், கடற்படையின் போர்க் கப்பல்களை பாதுகாக்கும் வகையில் போர் விமானங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தவாங் பகுதியில் ட்ரோன்களை கண்காணிக்கும் பணியில் சுகோய் - 30 எம்கேஐ ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago