பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் இல்லை - மத்திய அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய ஓய்வூதியத் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பல மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளன.

இதனிடையே, மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பாகவத் கராத் எழுத்துபூர்வமாக அளித்த பதில்: மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைமீண்டும் தொடங்க முடிவு எடுத்திருப்பது குறித்தும், அதுதொடர்பான பரிந்துரையையும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் மத்தியஅரசிடமும், ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமும் (பிஎப்ஆர்டிஏ)சமர்ப்பித்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் சார்பில் இதுபோன்ற பரிந்துரை எதுவும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆனால் ஓய்வூதியத் தொகை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (பிஎப்ஆர்டிஏ) சட்டப்படி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (என்.பி.எஸ்.) மாநில அரசுகளும், ஊழியர்களும் அளித்த பங்களிப்பை மாநில அரசுகளிடம் திரும்பத்தர சட்டப் படி இயலாது. மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE