கர்நாடகாவில் முதல் முறையாக சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

By இரா.வினோத்

பெங்களூரு: நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், புதியதாக கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம் மான்வி அருகேயுள்ள கோழி கேம்ப் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 3-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, பெற்றோர் சிறுமியை சிந்தானூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே அவரது உடலில் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு டெங்கு, சிக்கன் குனியாவுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் புனேவில் உள்ள தேசிய‌ வைரலாஜி ஆய்வகத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனையில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக பெல்லாரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிறுமி வசிக்கும் கோழி கேம்ப் பகுதியில் உள்ள 150 குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி, சோதனை நடத்தும் பணிகளை தொடங்கியுள்ளோம். விரைவில் ஜிகாவைரஸில் இருந்து தப்பிப்பதற்கான வழிகாட்டுதலை சுகாதாரத்துறை வெளியிட இருக்கிறது. இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள‌து. இதனால் ஜிகா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை கர்நாடக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE