திருவனந்தபுரம்: பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு, கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளுநர் முகம்மது ஆரிப் கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஆளுநர் ஆரிப் முகம்மது கான் குற்றம்சாட்டி இருந்தார். ஆளுநர் மீது கேரள அரசும் குற்றம் சாட்டி இருந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு கேரள சட்டப்பேரவையில் கடந்த 7-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் ராஜீவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். பல்கலைக்கழக வேந்தரை 3 பேர் கொண்ட குழு தேர்வு செய்யும் என்றும், இந்த குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர் என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேந்தராக தேர்வு செய்யப்படுபவர், விவசாயம், கால்நடை மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், சமூக அறிவியல், இலக்கியம், கலை, கலாச்சாரம், சட்டம், பொது நிர்வாகம் என ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கும் கல்வியாளராக இருப்பார் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேந்தரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்றும் மீண்டும் ஒரு முறையோ அல்லது பல முறையோ அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தால் முன்கூட்டியே அரசுக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை ஆய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், புதிய வேந்தரை நியமிப்பதற்கான அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேந்தராக நியமிக்கப்படுபவர் கல்வியாளராக இருப்பதற்குப் பதில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்பதையே காங்கிரஸ் வலியுறுத்துவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டியவர்களை வேந்தர்களாக நியமிக்க முயல்வதன் மூலம் இந்த விவகாரத்தை அரசு அரசியலாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago