பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பெலா எம் திரிவேதி தன்னை விடுவித்துக் கொண்டு விலகினார். இதனால் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் அவரது கண்முன்பாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்று வந்த 11 பேரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு அவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 30-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தனது சக நீதிபதி பெலா எம் திரிவேதி விலகுவதாக நீதிபதி அஜய் ரஸ்டோகி தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், நீதிபதியின் விலகலுக்கான எந்தக் காரணத்தையும் அந்த அமர்வு தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் இதே அமர்வில் விசாரணைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, தாஹோத் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது 3 வயது குழந்தை உட்பட7 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 2008-ல் தண்டிக்கப்பட்டபோது அமலில் இருந்த தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் இவர்களை விடுதலை செய்ய குஜராத் அரசு உத்தரவிட்டது. இதன்படி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியது. அப்போது, “இவர்கள் 11 பேரும் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாலும் நன்னடத்தை காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டனர். 1992-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று குஜராத் அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தண்டனைக் குறைப்பின் கீழ் 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு நவம்பர் 30 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையை பயன்படுத்த, குஜராத் அரசை கடந்த மே மாதம் அனுமதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பில்கிஸ் பானு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன், பானுவின் வழக்கறிஞர் எடுத்துரைத்தார். இதற்கு தலைமை நீதிபதி, “இரண்டு மனுக்களையும் ஒன்றாகவும், ஒரே அமர்வு முன்பும் விசாரிக்க முடியுமா என்பது குறித்து ஆராய்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

கடந்த 2004-ல் 11 பேர் மீதான வழக்கை அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. மும்பை சிபிஐ நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறியது. இந்நிலையில், மகாராஷ்டிர அரசின் தண்டனைக் குறைப்பு கொள்கை இவ்வழக்கில் பொருந்தும் என்றும், அதை பின்பற்றியிருந்தால் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் கூறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்