இமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் பதவியேற்பு: ராகுல், பிரியங்கா காந்தி பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு (58) பதவியேற்றுக் கொண்டார். பிரதிபா சிங்கின் தீவிர ஆதரவாளரான முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்றார். சிம்லாவில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உ.பி. பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அபிமானத்தைப் பெற்றவர் என்று தெரிகிறது.

முன்னதாக, இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்தன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சிம்லாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வரை தேர்வு செய்ய கட்சித் தலைமைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அதில் சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பிரதிபா சிங் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் காங்கிரஸுக்குள் உட்கட்சி பூசல் எழுந்துவிட்டதோ என்று கூறப்பட்டது. ஆனால் சுக்வீந்தர் சிங் அளித்த பேட்டியில், "விதர்பா சிங் எங்கள் கட்சித் தலைவர். நான் அவரை என் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க வந்தேன் " என்று கூறியிருந்தார். இன்றைய பதவியேற்பு விழாவில் பிரதிபா சிங் கலந்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE