10 கவுன்சிலர்களை ரூ.100 கோடிக்கு பாஜக பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134-ல் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 104 இடங்களில் வென்றது. இந்நிலையில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் நேற்று கூறியதாவது:

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் கட்சியின் கவுன்சிலரான டாக்டர் ரோனாக்சி சர்மாவை யோகேந்திர சந்தோலியா என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பாஜக மாநில தலைவர் ஆதேஷ் குமார் குப்தா, ரோனாக்சி சர்மாவுடன் பேச விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகும் 10 கவுன்சிலர்களுக்கு ரூ.100 கோடி தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுதவிர, மேயர் தேர்தலின்போது கட்சி மாறி வாக்களிக்க ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு ரூ.50 லட்சம் தருவதாக பேரம் பேசி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தப் பேட்டியின்போது, ஆம் ஆத்மி கவுன்சிலர்களான டாக்டர் ரோனாக்சி சர்மா, அருண் நவாரியா மற்றும் ஜோதி ராணி ஆகியோர் உடன் இருந்தனர். இதனிடையே, முதலில் பணம் வாங்கிக் கொண்டு டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய ஆம் ஆத்மி கட்சி, இப்போது கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE