குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் 11 பாஜக வேட்பாளர்கள் வெற்றி

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.

இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 11 பாஜக வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு முன்பு அதிக அளவாக கடந்த 2002-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 4 பேர் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பூபேந்திர படேல், மாநிலத்திலேயே அதிக வாக்கு (1.92 லட்சம்) வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சந்திப் தேசாய் (1.86 லட்சம்), ஹர்ஷ் சங்கவி (1.17 லட்சம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதுபோல பாஜகவைச் சேர்ந்த 40 வேட்பாளர்கள் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவும் புதிய சாதனை ஆகும். 2017 தேர்தலில் 21 பேரும் 2012-ல் 17 பேரும் இதுபோன்ற சாதனை படைத்திருந்தனர்.

இந்தத் தேர்தலில் 500-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் யாரும் தோற்கவில்லை. குறைந்தபட்சமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பச்சுபாய் ஆரித்தியா பாஜக வேட்பாளர் வீரேந்திர சிங் ஜடேஜாவிடம் 577 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதுபோல 5 ஆயிரத் துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 16 பேர் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE