தோல் கழலை நோயால் 1.5 லட்சம் கால்நடை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1.55 லட்சம் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளன. இதில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு அதாவது 75,819 உயிரிழப்பு ராஜஸ்தானில் ஏற்பட்டது.

குறிப்பாக பசு மாடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டா லும், எருமை மாடுகள், ஒட்டகம், மான்கள் மற்றும் குதிரைகளுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் 24,430, பஞ்சாப்பில் 17,932, கர்நாடகாவில் 12,244, இமாச்சலப் பிரதேசத்தில் 10,681, குஜராத்தில் 6,193 கால்நடைகளும் தோல் கழலை நோய்க்கு உயிரிழந்தன.

நாடு முழுவதும் 29.45 லட்சம் கால்நடைகளுக்கு இதுவரை தோல் கழலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதை குணப்படுத்த ‘லம்பிப்ரோவாக் இன்ட்’ என்ற தடுப்பூசியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் ஹிசாரில் உள்ள குதிரைகள் தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. 25.5 லட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் இந்த நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE